வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம்! – எடப்பாடி பழனிசாமி.

எதிர்க்கட்சியினரே, மூக்கு மீது விரல் வைத்து பாராட்டும் அளவுக்கு சிறப்பான ஆட்சியை நடத்தி,  வெற்றிநடைபோடும் தமிழ்நாட்டை உருவாக்கியிருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என சூளுரைத்துள்ளார். 

15வது சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர், எனது ஆட்சி ஒரு மாதம்தான் இருக்கும், இரண்டு மாதம்தான் இருக்கும் என எதிர்க்கட்சிகள் செய்துவந்த அவதூறு பிரசாரத்தை முறியடித்ததாக குறிப்பிட்டார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றி நாட்டு மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அம்மா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வெற்றிநடை போடும் தமிழ்நாடு உருவாகி இருப்பதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், எதிர்க்கட்சியில் இருப்பவர்களே மூக்கு மீது விரல் வைத்து பாராட்டும் நல்லாட்சியை கொடுத்ததாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சிறப்புமிகு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் நன்றி கூறினார். பல்வேறு துறைகளில் விருதுகள் பெற காரணமாக இருந்த அமைச்சர்களுக்கும், சோதனையான காலகட்டத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

சபாநாயகர் நடுநிலையோடு இருந்து திறமையாகவும், முன்மாதிரியாகவும் அவையை நடத்தியதாகவும் முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். 

தொடர்ந்து  சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றும் வகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்றும் சூளுரைத்தார். 

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றதை அடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். 

 

Exit mobile version