நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை டவுன் ஹாலில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பது குறித்த அவசியத்தையும், வாக்களிப்பது பற்றிய முறையும் எடுத்துக் கூறப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட இந்தக்கூட்டத்தில் வாக்களிக்கும் முறை குறித்தும், வாக்கு யாருக்கு அளித்தோம் என்பதை தெரியப்படுத்தும் வாக்கு இயந்திரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் வாக்களித்து செல்வதற்கான சாய்வு மேடை, கைபிடி போன்ற அத்தியாவசிய தேவைகள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அமைக்கப்படும் என்றும் தேவைப்படும் பட்சத்தில் வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி தரப்படும் என்றும் தெரிவித்தார்.