வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் இருந்து சீலிடப்பட்ட இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் இருந்து, சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், சென்னை ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச்சீட்டு கருவி, கட்டுப்பாட்டு கருவிகளும் கொண்டு வரப்பட்டன. வாக்கு எண்ணும் மே 23 தேதி வரை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சென்னை லயோலா கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. ஆயிரத்து 309 வாக்கு சாவடிகளில் இருந்து 3 ஆயிரத்து 139 மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், 97 லாரிகளில் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. லயோலா கல்லூரியைச் சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து, சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.