எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களிப்பது இணைந்துள்ள நாட்டை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு மாற்றிவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள கிச்சடி கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்தார். முந்தைய கூட்டணி அரசுகள் 2ஜி உள்பட பல்வேறு ஊழல்களில் தொடர்புடையதை மக்கள் அறிவார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். மத்தியில் வலிமையான அரசாங்கம் அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் பல இடங்களில் நிகழ்ந்த அசம்பாவித சம்பவங்கள், பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் தடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். காஷ்மீர் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை மக்கள் அறிவார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். தேசநலனுக்கு பாஜக ஆட்சி முன்னுரிமை கொடுத்ததே இதற்கு காரணம் என்றார்.