தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 156 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியிடங்களுக்கும் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டத் தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 4 லட்சத்து 2 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணுவாக்கு எந்திரம் மூலம் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு ஒரு லட்சத்து 84 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடத்துவதற்காக 60 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், அழியா மை ஆகியவற்றைக் கொண்டுசென்று, வாக்குச்செலுத்துவதற்கான தடுப்புகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.