மக்களவை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற, தனியார் வசம் இருந்த, உரிமம் பெற்ற துப்பாக்கிகள், காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில், சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் குமாரசாமி பட்டியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி கலந்து கொண்டு, ஆயுதப்படை வளாகத்திற்குள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, பொதுமக்கள், அச்சமின்றியும், யார் அச்சுறுத்தல் இன்றியும் வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.