11 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படத்துடன் கூடிய வங்கி-அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள், வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

மேலும், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுக்கான ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version