மக்களவை தேர்தல் நிறைவு: 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை

உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்தியாவின் 17வது மக்களவைக்கான தேர்தல் நிறைவு பெற்றது. 7 கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படவுள்ளன.

17வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 10ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், 60 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர்.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூரை தவிர்த்து மீதமுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களும், தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதிகள் உட்பட பல்வேறு மாநில சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெற்று முடிந்துள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படவுள்ளன.

Exit mobile version