மாடி தோட்டம் மூலம் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து பயனடைந்து வரும் தன்னார்வலர்கள்
ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவரக்கூடிய தற்போதைய சூழலில் இயற்கை முறையில் விளைந்த நஞ்சில்லா காய், கனிகள் என்பது அரிதாகிவிட்டது.
இந்நிலையில், இயற்கை ஆர்வலர்கள் சிலர் மாடி தோட்டம் அமைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கு, திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் விதை, இடுபொருட்கள் வழங்கி பயிற்சியும் கொடுக்கிறார்கள்.
இவர்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி,கன்னிவாடி, ஒட்டன்சததிரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் மாடித்தோட்டம் அமைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாடி தோட்டத்தில் மண் இல்லா விவசாயம் என்பது முக்கிய அம்சம் ஆகும். இதற்காக, பிரத்யேக பைகளில் தென்னை நாரின் கழிவு மூலம் தயாரிக்கப்பட்ட உரம் மற்றும், இயற்கை உரம் ஆகியவற்றின் மூலம் சிறிதளவு தண்ணீரைக் கொண்டு இந்த விவசாயம் நடைபெறுகின்றது.
இந்த முறையில் அனைத்து வகை காய்களும் விளைவிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். இதிலிருந்து பெறப்படும் காய்களை நாமும் பயன்படுத்தி பிறருக்கும் விற்பதன் மூலம் உபரி வருமானம் கிடைப்பதோடு, நல்ல பொழுது போக்காகவும் இருப்பதாக கூறுகிறார்கள்..