கொரோனாவை வென்ற சுதந்திரபோராட்ட தியாகி வி.கே.செல்லம்!!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின், இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து, வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய தியாகி வி.கே.செல்லம் என்பவர், 96 வயதில் கொரோனா வைரஸூக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளார். இக்கட்டான இன்றைய சூழலில், பொதுமக்கள் அனைவருக்கும் நம்பிக்கையும், தெம்பும் அளிக்கக்கூடிய அந்தச் செய்தி பற்றிய ஒரு சிறப்புப் தொகுப்பு…

குழந்தைகள்… இளைஞர்கள்… முதியவர்கள்… என வயது வித்தியாசமின்றி, அனைத்துத் தரப்பினரையும் கொரோனா பலி கொண்டு வருகிறது. அதைத் தடுக்கும் வழி தெரியாமல், மருத்துவ உலகம் திணறிக் கொண்டிருக்கிறது. சமீப நாட்களில் சென்னையில் அதிகரித்த கொரோனா தொற்றும், அது ஏற்படுத்திய மரணங்களும் தமிழக மக்கள் மனதில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொரோனாவைக் கண்டு பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில், சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 96 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி குணமடைந்து, வீடு திரும்பி உள்ளார். வீட்டிலும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு, பூரண குணமடைந்த அவர், தற்போது இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பிவிட்டார். அவர் பெயர் வி.கே.செல்லம். இவர், இந்திய விடுதலைக்காக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய பெருமை பெற்றவர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரால் கௌரவிக்கப்பட்ட பெருமை உடையவர் வி.கே.செல்லம் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

96 வயதான நிலையில், வியாசர்பாடியில் தற்போது குடும்பத்தினருடன் வசித்து வரும் வி.கே.செல்லத்தின் மகன் திருநாவுக்கரசு, சென்னை செனாய் நகரில் அமைந்துள்ள மத்திய வட்டார அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருநாவுக்கரசு மூலம், விடுதலைப் போராட்ட வீரர் செல்லத்துக்கும், அவரது வீட்டில் இருந்த 8 பேருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. கூட்டுக்குடும்பமாக வாழும் செல்லத்தின் வீட்டில் மொத்தம் 40 குடும்ப உறுப்பினர்கள் உள்ளதால, உடனடியாக அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா பாதிப்புக்குள்ளான தியாகி செல்லம், ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 5-ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அரசு மருத்துவர்கள் அளித்த முறையான சிகிச்சையின் மூலம் குணடைந்த வி.கே.செல்லம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீடு திரும்பினர். அதன்பிறகு, வீட்டிலும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள், பூரண குணமடைந்து தற்போது அனைவரும் இயல்பு வாழ்கைக்குத் திரும்பி உள்ளனர்.

இதுபற்றி விடுதலைப் போராட்ட வீரர் தியாகி செல்லம் நம்மிடம் பேசியபோது, அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் சுகாதாரப் பணியாளர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள செல்லம், 96 வயதிலும் தினமும் காலையும் மாலையும் நடைபயிற்சி மேற்கொள்வதை இப்போதும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும், மீன், நாட்டுக்கோழி, ஆட்டிறைச்சி ஆகிய அசைவ உணவுகளை அதிகம் உண்பதால், தான் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்லும் செல்லம், கொரோனா பயத்தில் பலர் சென்னையை விட்டு செல்வது தனக்கு வருத்தமாக உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். 

செல்லத்தின் பேத்தி ரேவதி கூறும்போது, அரசாங்கம் சொல்லும் அறிவுரைகளை முறையாகக் கடைபிடித்தாலே நாம் அனைவரும் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இளம் வயதில் வெள்ளையர்களுக்கு எதிராகப் போரடிய விடுதலைப் போரட்ட வீரர் வி.கே.செல்லம்… தனது 96-வது வயதில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் நம்பிக்கையோடு வெற்றி பெற்றுள்ளார். கொரோனாவைக் கண்டு அளவுக்கதிமாக அச்சம் கொள்ளும் அனைவருக்கும் செல்லத்தின் போராட்டம் ஒரு தன்னம்பிக்கைப் பாடம்…

Exit mobile version