விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசியருக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. கத்திக்குத்தினைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கத்திக்குத்து சம்பவமானது அண்ணன் – தம்பி இருவரின் இடையே ஏற்பட்ட சொத்துத் தகராறினால் ஏற்பட்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோலியனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றக் கூடியவர் நடராஜன். இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கும் இவரது அண்ணன் ஸ்டாலின் என்பவருக்கும் குடும்பச்சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இன்று எப்போதும் போல ஆசிரியர் பணியினை மேற்கொள்வதற்காக பள்ளிக்கு வந்திருந்த நடராஜனை இருசக்கர வாகனத்தில் வந்த அவரது அண்ணன் ஸ்டாலின் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கழுத்து மற்றும் கை, கால்களில் வெட்டு விழுந்துள்ளது. இதனை கவனித்த அவரிடம் பயிலும் மூன்று மாணவர்கள் அவரைக் காப்பாற்ற முன்வந்தனர். அதனால் ஸ்டாலின் அவர்களையும் தாக்கியுள்ளார். இதன் விளைவாக அந்த மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. வன்முறைக்கு உள்ளான ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றினுள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மெற்கொண்டு வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்ட நபரான ஸ்டாலினை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.