நடிகர், வசனகர்த்தா, இயக்குநர் என பன்முகத்திறமையோடு வாழ்ந்த விசுவின் 75 வது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சிறப்புத் தொகுப்பை இப்போது பார்க்கலாம்…
வசனங்களில் குடும்பங்களை ஈர்த்த “விசு”
மீசை இருந்தா சந்திரன் மீசை இல்லைன்னா இந்திரன் என்ற ஒரு வசனம்தான் தில்லு முல்லு திரைப்படத்தின் மொத்தக் கதையின் சாராம்சம். கே.பாலச்சந்தர் இயக்கிய அத்திரைப்படத்தின் வசனகர்த்தாவான விசு அப்படத்தின் மூலம் திரையில் தோன்றினார்.
ஆரம்பகாலத்தில் நாடங்களில் பணியாற்றிய விசு, கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் திரைப்படம் மூலம் வசனகர்த்தாவாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். சதுரங்கம், அவள் அவள் அது, மழலை பட்டாளம் என வசனகர்த்தாவாக பணியாற்றிய விசு மீண்டும் கே.பாலச்சந்தருடன் இணைந்த தில்லுமுல்லு திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.
நீளமான வசனம், அடுக்குமொழியைக் கலந்து அடிப்பது கிடைத்த இடத்தில் நகைச்சுவை நுழைப்பது என விசுவின் ஸ்டைலில் நெற்றிக்கண், குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, மிஸ்டர் பாரத், சம்சாரம் அது மின்சாரம் என பல திரைப்படங்கள் கவனம் ஈர்த்தன.
விசு திரைக்கதை எழுதிய திரைப்படங்களும், இயக்கிய திரைப்படங்களும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பத் திரைப்படங்கள்தான். மிடில் கிளாஸ் வாழ்க்கையையும், நடுத்தரக் குடும்பத்தின் பிரச்சனைகளையும், உறவுச்சிக்கல்களையும், ஏக்கங்களையும் பேசின.
கூட்டுக்குடும்ப வாழ்க்கைப் பின்னணியுடைய விசு, பெரும்பாலும் அவர் பார்த்து ரசித்த மனிதர்களை தன்னுடைய கதைகளில் மாற்றி மாற்றி முடிச்சு போட்டு அதற்கு திரைக்கதை வடிவம் கொடுப்பார். ” இந்த கீழ்வீட்டு நபருக்கு மேல்வீட்டில் இருக்கும் பெண் மனைவியாக இருந்தால் எப்படி இருக்கும்.. மேல் வீட்டு நபருக்கு பக்கத்து வீட்டுப் பெண் மனைவியாக இருந்தால் எப்படி இருக்கும்” என அவர் நிஜவாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட கற்பனை முயற்சிதான் அவருடைய திரைப்படங்கள்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே, படத்தில் இருக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் அழுத்தமாய் அமைந்திருக்கும். ‘கோதாவரி கோட்டக்கிழிடி’ போன்று அழுத்தம் திருத்தமாய் பேசப்படும் வசனங்கள் அவர் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்தன. கண்மனிப் பூங்கா திரைப்படத்திம் மூலம் இயக்குநராக அறிமுகமான விசுவுக்கு “சம்சாரம் அது மின்சாரம்” திரைப்படம் சிறந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.
விசுவின் திரைப்படங்களில் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை அவர் தீர்த்துவைப்பது போல்தான் கதையமைக்கப்பட்டிருக்கும். உண்மையில் அப்படி ஒருவர் இருந்தால் குடும்பப் பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும் என்று சிலாகித்தவர்கள் ஏராளம். கடைசியாக மணல் கயிறு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்த விசு, உடல் நலக்குறைவாலும் வயோதிகத்தாலும் திரைத்துறையிலிருந்து விலகி ஓய்வில் இருந்தார். வாரத்திற்கு இரண்டுமுறை டயாலசிஸ் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட விசு, கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். குடும்பம் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கும்வரை விசு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.