கொரோனோ வைரஸை எதிர்கொள்வது எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. கொரோனோவைப் போல சமீபத்திய காலங்களில் உலகையே அதிரவைத்த வைரஸ்கள் எவை? விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு.
மக்களை உலுக்கிய வைரஸ்கள்:
கொரோனோ வைரஸ்சுக்கு முன்பு இன்னும் 4 வைரஸ்கள் சர்வதேச மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ளன.
எபோலா வைரஸ்:
இந்த நூற்றாண்டின் மிக அபாயகரமான வைரஸ்களில் ஒன்று எபோலா. காட்டில் வாழும் பழந்தின்னி வெளவால்கள், மனிதக் குரங்குகள் இவற்றில் இருந்து சில மனிதர்களுக்கும், பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து சகமனிதர்களுக்கும் இது பரவியது.
1976ஆம் ஆண்டில் காங்கோ குடியரசில் உள்ள எபோலா நதிக்கரையின் கிராமம் ஒன்றில் இந்த வைரஸ் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால், அந்த நதியின் பெயரே இதற்கு வைக்கப்பட்டது. பின்னர் 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை மீண்டும் தலையெடுத்த எபோலா வைரஸால் மொத்தம் 11,300 பேரும், கடந்த ஆண்டு எபோலா வைரஸால் 1800 பேரும் பலியாகி உள்ளனர். இதுவரை எபோலாவுக்கு மருந்துகள், சிகிச்சை முறைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சார்ஸ் வைரஸ்:
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தல் சார்ஸ் வைரஸ். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்பதைக் குறிக்கும் Severe Acute Respiratory Syndrome – என்பதன் சுருக்கம்தான் சார்ஸ். கடந்த 2002ஆம் ஆண்டில் சீனாவின் குவாங்டாங்க் மாகாணத்தில் இந்த சார்ஸ் வைரஸ் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது.
உலகில் உள்ள 26 நாடுகளின் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சார்ஸ் வைரஸால் இதுவரை பாதிப்பைச் சந்தித்து உள்ளனர். சீனாவில் மட்டும் இந்த
வைரஸ்சுக்கு 774 பேர் பலியாகி உள்ளனர். சார்ஸ் வைரஸ்சின் பாதிப்புக்கும் இதுவரை எந்த மருந்தும், சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை
ஜிகா வைரஸ்:
டெங்குவைப் பரப்பும் அதே ஏடிஸ் (Aedes) வகைக் கொசுவால் பரவக் கூடிய இன்னொரு வைரஸ்தான் ஜிகா. 1947ஆம் ஆண்டில் தான்சானியா நாட்டில் குரங்குகளைப் பாதித்த இந்த வைரஸ், 1952ஆம் ஆண்டில் மனிதர்களுக்குப் பரவியது. 2007ஆம் ஆண்டில் மைக்ரோனேசியா, 2013ல் பிரெஞ்சு பாலினேசியா நாடுகளுக்குப் பரவிய ஜிகா, இதுவரை 83 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ்சிற்கும் இதுவரை மருந்தோ, சிகிச்சை முறையோ இல்லை
நிபா வைரஸ்:
1998ஆம் ஆண்டில் மலேசியாவில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பன்றிகளுக்கு நிபா வைரஸ் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் மனிதர்களுக்கும் பரவிய நிபா, கடந்த 2018ஆம் ஆண்டில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கண்டறியப்பட்டது. கேரளாவில் மட்டும் நிபாவுக்கு 18பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை அச்சுறுத்தும் இந்த நிபா வைரஸ்சுக்கும் இதுவரை தடுப்பு மருந்து இல்லை.