விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரே நாளில் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணை, ஒரே நாளில் 13 அடி உயர்ந்துள்ளது. 4 அடியாக இருந்த நீர்மட்டம், 17 அடியாக அதிகரித்துள்ளது. இதே போன்று தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த கோயிலாறு அணையின் நீர்மட்டம் 8 அடியாக உயர்ந்துள்ளது. இரண்டு அணைகளுக்கும் தொடர்ந்து நீர் வந்து கொண்டு இருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 146 மில்லி மீட்டரும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் 128 மில்லி மீட்டர் மழையும் பெய்ததுள்ளது.