போலீசாரிடம் வசமாய் சிக்கிய கன்னித் திருடர்கள்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாகன திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்… இப்போது தான் திருட ஆரம்பித்ததாகவும், அதற்குள் மாட்டிக் கொண்டதாகவும் கூறும் கன்னித் திருடர்களின் கதை இது…

நீலாங்கரை, செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், திருவான்மியூர் பகுதிகளில் அதிக அளவில் வாகனங்கள் திருடுபோவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அடையார் தனிப்படை போலீசார் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ஈஞ்சம்பாக்கம் அடுத்த அக்கரை பகுதியில் திருடுபோன ஆரஞ்சு நிற duke பைக் செல்வதை சிசிடிவி-யில் பார்த்த தனிப்படை போலீசார் அதை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர்…அப்போது வாகன திருட்டில் ஈடுபட்டது செம்மஞ்சேரியை சேர்ந்த கோவிந்தன் மற்றும் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்… விசாரணையில், தாங்கள் பிரபல இருசக்கர வாகன திருடன் ஸ்டீபனிடம் இருந்து பைக்குகளை வாங்கி கல்லூரி மாணவர்களிடம் குறைந்த விலைக்கு விற்று வந்ததாக கூறியுள்ளனர். மேலும் ஸ்டீபன் சிறை சென்ற நிலையில், நாமே ஏன் திருடக் கூடாது – நாமே ஏன் விற்கக் கூடாது என்று முடிவு செய்து திருட ஆரம்பித்ததாக விளக்கம் அளித்தனர்.

நள்ளிரவில் அனைவரும் உறங்கும் நேரத்தில் வீடுகளின் வெளியில் நிற்கும் விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருடி விற்றதாகவும் அதில் கிடைத்த பணத்தில் கஞ்சா, மது, பெண்கள் என உல்லாசமாக வாழ்ந்து வந்ததாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

கைதான கன்னித் திருடர்களிடம் இருந்து 2 டியூக், 2 டியோ, 1 ராயல் என்பீல்டு, 1 பல்சர் உள்ளிட்ட 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதவிதமான பைக்குகளை திருடி உல்லாசமாக ஊர்சுற்றி வந்த இருவரும் இப்போது சிறையில் பத்துக்கு பத்து அறையில் நடைபோட்டு வருகின்றனர்.

Exit mobile version