ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 50 ரன்களைக் குவித்தார். 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெரும் நிலையில் இருந்தது.
இந்நிலையில் 19-வது ஓவரில் 2 ரன்களை மட்டும் வழங்கி, 2 விக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்து ஆட்டத்தை ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் பக்கம் திருப்பினார்.
முன்னதாக 19வது ஓவரை வீச வந்த பும்ரா, கேப்டன் கோஹ்லியுடன் பீல்டிங் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது ரோஹித் ஷர்மாவும் ஒரு சில ஆலோசனைகள் வழங்க வந்தார். ஆனால் இருவரும் ரோஹித் ஷர்மாவை கண்டு கொள்ளாமல் இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.