ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரியும், அதுதொடர்பான விளம்பரங்களில் நடித்த விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆன்லைன் சூதாட்டங்கள் இளைய சமூகத்தினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்கள் வைத்து விளம்பரங்கள் செய்வதால், இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் இளைஞர்கள், தற்கொலை செய்து கொள்வதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நிர்வகிக்கும் நபர்களையும், விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் 4ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.