ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்கள் பட்டியலில் 183 போட்டிகளில் விளையாடி முதலிடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.
2008ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 13வது ஆண்டாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. தொடர் ஆரம்பமாகும்போது அப்போது நட்சத்திர வீரர்களாக இருந்தவர்கள் பெரும் தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அந்த வீரர்களை அணியின் உரிமையாளர்கள் விட்டுக்கொடுக்காமல் பல ஆண்டுகளாக தக்கவைத்து வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலி, தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் ஒரே அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர்.
2008ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட விராட் கோலி, தற்போதுவரை 183 போட்டிகளில் விளையாடியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்கம் முதலேவிளையாடி வரும் தோனி 166 போட்டிகளிலும், சுரேஷ் ரெய்னா 163 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். மும்பை அணியின் பொல்லார்ட் 155 போட்டிகளிலும், டெக்கன்சார்ஜர்ஸ் அணியில் இருந்துவிட்டு 2011 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150 போட்டிகளில் ரோஹித் சர்மாவும் விளையாடி உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டதால் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் வேறு அணிகளில் விளையாட நேர்ந்தது. எனினும், தோனி தலைமையிலான சென்னை அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளதும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை கோப்பையை ஒருமுறை கூட வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.