தமிழ்நாட்டில் பிறந்த பெண்கள் நாடாளவும் முடியும் என முதல் முதலில் தனது வீரத்தின் மூலம் நிரூபித்துக்காடிய பெருமைக்குரியவர் வேலுநாச்சியார். இந்தியாவின் முதல் வீரமங்கை வேலுநாச்சியாரின் 290-வது பிறந்த நாள் இன்று. அவரை குறித்த சிறிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு கடந்து வந்தாலும், வீரமங்கை என கூறியதும் முதலில் நினைவுக்கு வருவது வேலுநாச்சியார் தான். ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதியின் ஒரே மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். ஆணுக்கு பெண் சரிசமம் எனும் வகையில் சிறுவயது முதலே வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுதேர்ந்தார்.
வேலுநாச்சியாரின் அழகிலும், வீரத்திலும் மயங்கிய சிவகங்கை மன்னர், முத்து வடுகநாதர்,1746-ம் ஆண்டு வேலுநாச்சியாரை மணந்தார். சிவகங்கை சீமையை கைப்பற்ற முயன்ற ஆற்காடு நவாப், ஆங்கிலேயரின் உதவியுடன், கோயிலிலுக்கு சென்ற முத்து வடுகநாதரை கொன்று சிவகங்கை சமஸ்தானத்திற்குள் நுழைந்தான்.
மன்னரின் உடலை பார்க்க சென்ற வேலுநாச்சியாரை ஆங்கிலேயர்கள் தாக்க, வீறுகொண்ட வேங்கையாக அனைவரையும் அழித்து ஆங்கிலேயர்களை ஓட வைத்தார். மருதுசகோதரர்களின் ஆலோசனைப்படி சிவகங்கையிலிருந்து தப்பி மேலூர் சென்று தலைமறைவானார் வேலுநாச்சியார்.
கணவனை கொன்ற கயவர்களை பழிவாங்க, மன்னர் ஹைதர் அலி உதவியை நாடிய வேலு நாச்சியார், அவரது அரண்மனையில் தங்கி, தனது போர்ப் படைகளை தயார் படுத்திக்கொண்டார். தக்க சமயத்திற்காக காத்திருந்த நாச்சியார், தனது படைகளை மருது சகோதர்களின் தலைமையில் இரண்டாக பிரித்து போர் தொடுத்தார்.
சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி நன்னாளில் சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் கோயிலில் வழிபட பெண் வீராங்கனைகளுடன் மாறுவேடத்தில் சென்றார் வேலுநாச்சியார். கோயிலுக்குள் நுழைந்ததும் தாக்குதலை நடத்தி, ஆங்கிலேயர் படையே வேரோடு அழித்து சிவகங்கை சீமையை மீட்டார் வீரமங்கை வேலுநாச்சியார்.
வீரத்தின் விளைநிலமான தமிழ்நாட்டில் பிறந்து, தனது மண்ணை பறிக்க முயன்றவர்களை வீழ்த்தி, வீரமங்கையாக திகழ்ந்த வேலுநாச்சியார் தனது அறுபத்தாறாவது வயதில் உயிரிழந்தார்.