பாகிஸ்தான் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி அபிநந்தனுக்கு டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெறும் விழாவில் வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி அபிநந்தன், பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார். இதையடுத்துப் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிச் சிறைப்பட்ட அபிநந்தன், இந்திய அரசின் முயற்சியால் 3 நாட்களில் விடுவிக்கப்பட்டார்.
சில வாரங்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் பணியில் சேர்ந்த அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க விமானப்படை பரிந்துரைத்தது. இந்நிலையில் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்குவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
முப்படையினருக்கு வீரதீரச் செயலுக்காக வழங்கப்படும் விருதுகளில் பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய விருது வீர்சக்ரா விருதாகும். டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.