குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடந்து வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவரும், கர்நாடக மாநிலம், மங்களூரில் 2 பேரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மங்களூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். அந்த மாநில முதல்வர் எடியூரப்பா, அரசியல் கட்சிகளும், மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் லக்னோவின் மாதேகஞ்ச் பகுதியில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து, காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களை விரட்டினர். வன்முறையின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகமது வகீல் என்ற இளைஞர் உயிரிழந்தார். 112 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் அதிகரிக்கும் போராட்டங்களால் எல்லை பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் அண்டை மாநிலங்களில் இருந்து போராட்டக்காரர்கள் குவிந்து வருவதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.