திமுக ஆட்சியில் வன்முறை கலாச்சாரம் தான் அடிப்படை

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களை காக்க முயற்சி எடுக்காமல், மக்களை ஏமாற்ற கருணாநிதி உண்ணாவிரத நாடகமாடினார் என்று, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த சிறப்பான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

திமுக ஆட்சியில் வன்முறை கலாச்சாரம்தான் அடிப்படை கொள்கையாக இருந்தது என துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மக்களவை தொகுதிஅதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மின்சார தட்டுப்பாட்டை தீர்க்கமுடியாத அரசாகத்தான் திமுக விளங்கியது என்பதை, முன்னாள் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே ஒப்புக்கொண்டுதான் சென்றார் எனக் கூறினார். மக்கள் நலனில் அக்கரை கொண்ட அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அதிமுக தொண்டர்களின் கட்சி என்றும் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது மக்களுக்கான ஆட்சி என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை சாய்பாபா காலனியில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது மோடி தலைமையிலான அரசுதான் என்றும் வலிமையான பிரதமராக மோடி திகழ்ந்து வருவதாகவும் கூறினார். திமுகவினர் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு உருப்படியாக ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

நீதிமன்றத்தில் உள்ள கொடநாடு வழக்கு குறித்து அவதூறாக சொல்லி ஸ்டாலின் அரசியல் லாபம் பார்க்க முயல்வதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுக்கு எதிரானவர்களிடத்தில் சோதனை நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். தினகரனின் கட்சி நீர்வற்றிய குளம்போல் இருப்பதாக தெரிவித்த அவர், அதிமுக கூட்டணி 40 மக்களவை தொகுதிகளிலும் உறுதியாக வெல்லும் என்றார்.

Exit mobile version