செப்டம்பர் இரண்டாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் ஆரோக்கியமான, மாசில்லாத விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி?
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தற்காலிகமாக விநாயகர் சிலை உருவாக்கப்பட்டு, மக்கள் வசிக்கின்ற பொது இடங்களில் வைத்து வழிபடப்படுகிறது. ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் கழித்து, கடல், ஆறு, குளங்களில் அந்த சிலைகளை கரைப்பதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த சிலைகள், ரசாயனம் கலந்து பொருட்களால் செய்யப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவிடுகிறது. எனவே மத்திய மாநில அரசுகள், மாசில்லாத விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட சில விதிமுறைகளையும், வரையறைகளையும் வகுத்துள்ளது.
இது தொடர்பாக அறிவுறுத்தியுள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், விநாயகர் சிலைகளை, இயற்கையாக மக்கும் பொருட்கள், பாரம்பரிய மணல் ஆகியவற்றைக் கொண்டே உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மாறாக, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், எளிதில் கரையாத கெட்டியான தன்மையுள்ள மணல் போன்றவற்றால் சிலைகளை உருவாக்கக் கூடாது என, சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சிலைகளுக்கு வண்ணம் பூசுவதை தவிர்க்க வேண்டும் எனவும், குறிப்பாக, தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை கொண்டு சிலைகளுக்கு வண்ணம் பூசக் கூடாது எனவும், அது தீவிரமாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. வண்ணம் பூச நினைத்தால் இயற்கையாக தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய வண்ணங்களை பூசலாம் எனவும் தெரிவித்துள்ளது. விநாயகர் சிலைகளை அலங்கரிக்கக் கூடிய பூக்கள், துணிகள், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, சிலைகளை கரைக்கும் முன்னர் அகற்றிவிட வேண்டும்.
மக்கும் பொருட்கள், மக்காத பொருட்கள் என வகைப்படுத்தி அகற்ற வேண்டும். சுற்றுச் சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் சிலை கரைக்கக் கூடிய இடங்களை அடையாளப்படுத்தி அறிவிக்க வேண்டும். ஒரே இடத்தில் அதிக சிலைகளை கரைத்தால் அதிக மாசு ஏற்படும் என்பதால், கரைக்கும் இடங்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வழிமுறைகள்:
தமிழக அரசும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் தொடர்பாக வழிமுறைகளை வகுத்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. விநாயகர் சிலையை வைத்து வழிபடும் அமைப்பினர், காவல்துறை அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி அல்லது துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே, சிலைகளை வைக்க வேண்டும். 10 அடிக்கும் மேல் சிலை வைக்கக் கூடாது. இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை கொண்டு தயாரித்த சிலைகளை வைக்கக் கூடாது. எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை வைத்து விநாயகர் சிலை வைக்கும் இடத்தை உருவாக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. மாற்று மதத்தினர் இருக்கும் இடங்கள், கல்வி நிறுவன பகுதிகள், மருத்துவமனை பகுதி போன்ற இடங்களில் சிலைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சிலைகளை உருவாக்கி, வழிபட்டு இயற்கையான முறையில் கரைக்க வேண்டும் என தமிழக அரசு தனது வழிமுறையில் தெளிவுபடுத்தியுள்ளது.