நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற்றது
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது செங்கோட்டையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. விநாயகர் சிலைகள் கல்வீசி தாக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு பதிலடியாக மற்றொரு தரப்பினரின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அமைதி முயற்சியாக பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஊர்வலத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வலப் பாதைகள் முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் விநாயகர் சிலைகள் எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி குண்டாற்றில் கரைக்கப்பட்டன. சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கிய காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.