25 பேருடன் வேகமாக சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து-2 பேர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே மேட்டுக்குப்பத்தை சேர்ந்த 25 பேர் துக்க நிகழ்ச்சிக்காக வீரப்பார் கிராமத்திற்கு மினி சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பும் போது, பெரியசெவலை என்னும் இடத்தில் மினி சரக்கு வாகனத்தை வேகமாக செலுத்திய நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் ப்ரேக் அடித்துள்ளார்.

அப்போது வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சரக்கு வாகனத்தின் பின்புறம் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த தேன்மொழி, சேகர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, வாகன ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version