சிசிடிவி கேமிரா வளையத்துக்குள் கிராமம் – கணிசமாக குறைந்த குற்றச்செயல்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் வெளிநாடு வாழ் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், ஊரைச் சுற்றி 16 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும், ஊர் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளதால், அங்கு நடைபெற்ற குற்றச் செயல்கள் கணிசமாக குறைந்துள்ளன. அதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு…

கடவுளுக்கு அஞ்சாதவர்கள்… காவலுக்கு அஞ்சாதவர்கள்… இன்று கண்காணிப்புக் கேமராக்களுக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல், குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் தற்போது முதல் கண்ணாக இருப்பது கண்காணிப்புக் கேமராக்களே.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் 46 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் செல்வநாயகபுரம் கிராமமும் ஒன்று. இங்கு ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கியத் தொழில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும்தான். அதோடு, இந்த கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அதனால், சுற்று வட்டாரங்களில் செல்வநாயகபுரம் கிராமத்திற்கு தனி செல்வாக்கு உண்டு. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், செல்வநாயகபுரம் கிராமத்தில் திருட்டுச் சம்பவம் அதிகம் நடக்கத் தொடங்கியது. அப்போது இருந்து தொடர்ந்த திருட்டுக்களால், கிராம மக்களுக்குப் பல இழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, அந்த ஊர் இளைஞர்கள், கிராம மக்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதன்படி, செல்வநாயகபுரம் கிராமத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, பொதுமக்களிடமும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்களிடமும் பொதுநிதி வசூல் செய்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரின் நுழைவு வாயில், கிருஷ்ணன் கோயில், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் விடுதி உள்பட 5 இடங்களில் 16 சிசிடிவி கேமரா பொருத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றில் பதிவாகும் காட்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

இதையடுத்து, கிராமத்திற்குள் அந்நியர் நடமாட்டம், குற்ற நிகழ்வுகள், திருட்டுக்கள் ஆகியவை பெருமளவில் குறைந்துள்ளன. மேலும், மொத்த கிராமமும் 24 மணி நேரமும், கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பது சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல, குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துகள் மற்றும் வன்முறை போன்ற சம்பவங்களின்போது, அவற்றின் உண்மைத்தன்மையை அறியவும் இந்தக் கண்காணிப்புக் கேமராக்கள் பெரிதும் உதவுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட முதுகுளத்தூர் காவல்துறையினர், தங்களுக்கும் இந்தக் கண்காணிப்புக் கேமராக்கள் பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும் என்று தெரிவித்ததோடு, சொந்த செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்த ஊர் இளைஞர்களையும், பொதுமக்களையும் பெரிதும் பாராட்டினர்.

Exit mobile version