அறிவியல் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றிய விக்ரம் சாராபாயின் 100 வது பிறந்தநாள் இன்று. அவரை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு..
2019 ஆகஸ்ட் 12. இந்த நாளில் இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வரவேண்டும். ஒன்று, 1975ம் ஆண்டு ஏப்ரல் 19 ம் தேதியன்று இந்தியாவின் முதல் செயற்கைகோள், சோவியத் யூனியனில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது
மற்றொன்று 1919ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 12ம் தேதி, அகமதாபாத்தில் ஒரு குழந்தை பிறந்தது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், அந்த குழந்தை பிறக்காமல் போயிருந்தால், இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.
யார் அந்த குழந்தை? எது அந்த செயற்கைகோள் ? இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று கருதப்படுபவரான விக்ரம் அம்பாலால் சாராபாய் தான் அந்த குழந்தை. இந்திய விண்வெளித் திட்டத்தின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா தான் அந்த செயற்கைகோள்.
அகமதாபாத்தின், பெரும் தனவந்தர் குடும்பத்துக் குழந்தையாக இருந்த போதும், தொழிலதிபராகக் கூடிய வாய்ப்புகள் இருந்த போதும், இயற்கை விஞ்ஞானத்தின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் சர் சி வி ராமனின் மாணவராக்கியது. தொடர்ந்து ஹோமி ஜஹாங்கிர் பாபாவின் வழிகாட்டுதலையும் பெற்றுத் தந்தது. தீராத ஆர்வம் உள்ள மாணவருக்கு சரியான ஆசிரியர்கள் கிடைத்து விட்டால், அந்த மாணவனின் வெற்றி மாற்ற முடியாதது என்பதை இந்த இருவரின் வழிகாட்டுதலில் நிரூபித்துக் காட்டினார் விக்ரம் சாராபாய்.
1962ம் ஆண்டு இந்திய விண்வெளித் திட்டத்திற்கான ஆராய்ச்சி துவங்கப்பட்ட போது, அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்த விக்ரம் சாராபாய், அணுசக்தி துறையிலும் எல்லையற்ற ஈடுபாடு கொண்டிருந்தார்.
1966ம் ஆண்டு அணுசக்தி துறையின் தலைவர் ஹோமி ஜே பாபா, விமான விபத்தில் இறந்ததையடுத்து, அந்த துறையின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1971 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் தேதி, தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வை யிடச் சென்ற சமயம், மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இவரது உழைப்பால், இந்தியா விண்வெளி மற்றும் அணுசக்தி வரலாற்றில், விக்ரம் சாராபாய் என்னும் பெயர் நீக்க முடியாத இடம்பிடித்து நிலைபெற்றது. இவரது பணிகளை போற்றும் விதமாக 1972ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை , விக்ரம் சாராபாய் படம் பொறித்த தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது.
பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. அறிவியல் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றிய விக்ரம் சாராபாயின் 100 வது பிறந்தநாள் இன்று…