கடும் கட்டுப்பாடுகளுடன் ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று தொடக்கம்!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று தொடங்கும் நிலையில், பிரம்மாண்ட தேர்கள் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
ஆண்டு தோறும் நடைபெறும், பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது. ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் ஒடிசா மாநிலத்திற்கு வருகை தருவார்கள். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. தீர்ப்பை, மறு ஆய்வு செய்யக் கோரிய மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து,  உச்ச நீதிமன்றத்தின் விதித்த கட்டுப்பாடுகளுடன் பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று தொடங்குகிறது. பக்தர்கள் அதிகளவு கூடுவதைத் தவிர்க்க பூரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தேரை வடம் பிடித்து இழுக்க 500 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேரை வடம்பிடித்து இழுக்கும் பக்தர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்காக பிரம்மாண்ட தேர்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. யாத்திரையை பக்தர்கள் வீட்டில் இருந்தபடி நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version