விக்ரம் லேண்டரை துல்லியமாக கண்டறிய இஸ்ரோவிற்கு, நாசா உதவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்ற போது நிலவின் தரைப்பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பை இழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்த நிலையில், விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் ஆர்பிட்டர் உதவியுடன் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து துல்லியமாக கண்டறிய ஆர்பிட்டரின் சுற்றுவட்ட பாதையை 50 கிலோ மீட்டராக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டது. தற்போது நிலவில் விக்ரம் லேண்டர் சேதமின்றி முழுமையாக இருப்பதாகவும், நிலவின் நிலப்பரப்பில் சாய்ந்த நிலையில் தரை இறங்கி உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனிடையே, விக்ரம் லேண்டரை துல்லியமாக கண்டறிய இஸ்ரோவிற்கு நாசா உதவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தின் புகைப்படங்களை இஸ்ரோவிடம் நாசா அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த, நாசா தனது ஆய்வு தளத்திலிருந்து ரேடியோ சிக்னல்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.