டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் – விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கோயம்பேடு காய்கறி அங்காடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டெங்கு குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

பள்ளி, கல்லூரிகளில் டெங்கு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுவதுடன் நோயைக் கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Exit mobile version