தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப்பொறுத்தவரை 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி இரண்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக  அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “பாதிக்கப்பட்ட நபர் அயர்லாந்து நாட்டின் டப்லின் நகரைச் சேர்ந்த மாணவர், அவர் 17.03.2020 அன்று சென்னை வந்துள்ளார். 21 வயதான அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு, உடனே அவர்,  வீட்டு கண்காணிப்பில் தனிமைபடுத்தப்பட்டார். 18.03.2020 அன்று கொரோனா பாதிப்புக்கான அறிகுறியுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

 தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார், இருவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா குறித்த புள்ளிவிவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனுக்குடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

Exit mobile version