இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயோபிக் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார், அது தொடர்பான ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம். கிரிக்கெட்டும் சினிமாவும் இந்தியர்களின் இரத்த ஓட்டத்தில் கலந்துப்போன விஷயங்கள். கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி, சினிமாவைப் போலவே ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என பல கண்கொள்ளாக் காட்சிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் தளம். அதனால்தான் இரண்டுக்குமான தொடர்பு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது.
அந்த நெருக்கம்தான் கிரிக்கெட் ரசிகர்களையும், சினிமா ரசிகர்களையும் ஒரு புள்ளியில் ஒன்றிணைத்து அழகு பார்க்கிறது. அதற்கு சான்றாக கிரிக்கெட் தொடர்பாக வெளிவந்த திரைப்படங்களையும், இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட தோனி திரைப்படத்தையும் குறிப்பிடலாம்.
இப்போதும், பாலிவுட் இயக்குநர் கபிர் கான் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்ற வரலாற்று நிகழ்வை அடிப்படையாக்கொண்டு ரன்வீர் சிங் நடிப்பில் 83 என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.
அந்த வகையில், 800 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனைகளுக்கு திரைவடிவம் கொடுக்க தமிழ் சினிமா தயாராகிவிட்டது.
ஆரம்ப காலத்தில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை வேகப்பந்து வீச்சாளராக தொடங்கிய முத்தையா முரளிதரன், பிறகு பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோவின் அறிவுரைப்படி சுழற்பந்து வீச்சாளராக அவதாரம் எடுத்தார். முரளிதரின் சுழலில் அஞ்சாத ஆட்டக்காரர்களும் இல்லை, வீழாத வீரர்களும் இல்லை எனும் நிலையை உருவாக்கி 18 ஆண்டுகள் தன்னுடைய சுழலால் ஆதிக்கம் செலுத்தினார்.
133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்களையும், 350 ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை, இப்போது ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கத்தில் திரைப்படமாகத் தயாராக உள்ளது. முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி விளையாட உள்ள இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான DAR Motion pictures பிரபல தமிழ்த் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து தயாரிக்க உள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் கிரிக்கெட் விளையாடிய விஜய் சேதுபதி பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் நடுப்பக்கத்தை மாற்றி எழுதிய முத்தையா முரளிதரானாக மாறப்போகிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு சுழற்பந்து வீச்சின் நுணுக்கங்கள் பற்றி முரளிதரனே அறிவுரை வழங்க இருக்கிறார் என்பதுதான் கூடுதல் சிறப்பு.