ஈரானிடம் பிடிபட்ட பிரிட்டிஷ் கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஈரானால் பிரிட்டிஷ் கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியர்கள் 18 பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கப்பலிலேயே இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது. அவர்களை ஈரானில் உள்ள தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும் என இந்தியா கோரியிருந்தது.
இந்நிலையில், கப்பலில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்டோர் கப்பலில் பணிபுரியும் காட்சிகள் ஈரான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்களது ஒத்துழைப்புக்கு நன்றி என ஈரான் கடற்படை அதிகாரி தெரிவிப்பது போன்றும், அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட மாலுமிகள் தங்களுக்கான உணவை தாங்களே வழக்கம் போல் தயாரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.