நோய்களை பரப்பும் பாக்டீரியாக்களை அழிக்கும் பாத்திரம் கழுவும் பஞ்சு

பாத்திரம் கழுவப் பயன்படும் பஞ்சு மூலம் நோய்களை பரப்பும் பாக்டீரியாக்களை அழிக்கலாம் என்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்….

மைக்ரோபயாலஜி எனப்படும் நுண்ணுயிரியல் பிரிவைச் சேர்ந்த அறிஞர்கள், அமெரிக்க நுண்ணுயிரியல் சங்கத்தின் சந்திப்புகளில், அவ்வப்போது பல புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த சங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கூட்டம், கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று அமெரிக்காவில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நியூயார்க் கல்வியியல் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வின் தகவல்கள்தான் இப்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பாத்திரம் கழுவப் பயன்படும் பஞ்சில் இருந்து உருவாகும் வைரஸ்கள், சமையலறையில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கின்றன என்பதுதான் அந்த ஆய்வின் சுருக்கம். ஆனால் இந்த ஆய்வு சமையலறையோடு நின்றுவிடவில்லை. பாத்திரம் கழுவும் பஞ்சில் சிறிதாகத் தோன்றி, பின்னர் பெரிதாக வளரும் இந்த வைரஸ்களின் பிரதான உணவே பாக்டீரியாக்கள்தான் என்பதால், இந்த வைரஸ்கள் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்பட வாய்ப்புகள் உள்ளன.

ஆண்டிபயாட்டிக் எனப்படும் எதிர்உயிரி மருந்துகளால் கூட அழிக்க முடியாத வலிமையான பாக்டீரியாக்களை, கொல்லக் கூடியவையாக இவை உள்ளன. இவற்றைக் கொண்டு தனிமனிதர்களின் உடலில் நோயை உருவாக்கும் பாக்டீரியாக்களைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் வெற்றிகரமான முடிவுகளையே கொடுத்துள்ளன.

இதனால் பாக்டீரியாவின் தொற்றால் ஏற்படும் நோய்களுக்கு, இந்தப் புதிய வைரஸ்கள் எதிர்காலத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. பென்சிலீன், ஆண்டிபயாடிக் – இவற்றின் கண்டுபிடிப்புகளைப் போல, இந்த சமயலறை வைரசின் கண்டுபிடிப்பும் மருத்துவத் துறையினரால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

Exit mobile version