சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள், சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேரம் மற்றும் வார இறுதி நாளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள், மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் முன்பதிவு செய்தும், தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்தும் ரயில்களில் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில், வடமாநில தொழிலாளர்கள் குவிந்து காணப்பட்டனர். இடம் கிடைக்காத பயணிகள், ரயில் நிலையங்களிலேயே காத்துகிடந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுவதுடன், பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றுவதையும் ரயில்வே பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர்.

இரவு நேர ஊரடங்கு காரணமாக, அதிகாலை 4 மணி முதல் இரவு 10 வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் போதிய அளவு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பயணிக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுவதுடன், பேருந்தில் ஏறுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்வதற்கான கிருமிநாசினி வழங்கப்படுகிறது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை வரவேற்றுள்ள பயணிகள், எந்தவித அச்சமும் இன்றி அரசு பேருந்துகளில் பயணிக்க முடிவதாக தெரிவித்தனர்.

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து, பயணிகளின் வருகையைப் பொறுத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பின்னர் இரவில் இயங்கும் பேருந்துகள் பகலில் இயக்கப்படும் என அறிவித்தனர். பயணிகளின் வருகை குறைந்து காணப்படுவதால் குறைந்த அளவே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Exit mobile version