கன்னியாகுமரியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை

கன்னியாகுமரியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. அது மட்டுமின்றி வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இரணியல், பேயன்குழி, ஆசாரிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.  மின்கம்பங்களும் துண்டிக்கப்பட்டன.

குறிப்பாக இரணியல் பகுதியில் 300 வருட பிரம்மாண்ட ஆலமரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. தொடர் மழையின் காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால், குளங்கள் உடைந்து, ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலைகளை தண்ணீர் சூழ்ந்தது.

வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் நீர் புகுந்ததால், சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

தொடர் மழையால் நித்திரவிளை, ஏலாக்கரை மற்றும் பணந்தோப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

அரசுப் பள்ளி கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

25-க்கும் மேற்பட்ட வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

கன மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள் உடைந்து வயல்வெளிகளில் நீர் புகுந்ததால், சுமார் ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவிலான நெல் விவசாயம் பெரிதும் சேதமடைந்துள்ளது.

நாகர்கோவில், மருங்கூர், புத்தேரி, தெரிசனங்கோப்பு, ஆசாரிப்பள்ளம், இறச்சகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின.

Exit mobile version