வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அளிக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில், கடந்த மார்ச் 30ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட10.57 லட்ச ரூபாய்க்கான உரிய விளக்கத்தை துரைமுருகன் தரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் வாக்காளர்களின் பெயர், வார்டு எண் உள்ளிட்ட முக்கிய தகவல்களை உள்ளடக்கிய 82 காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுட்டிக் காட்டியிருக்கும் தேர்தல் ஆணையம்,

ஒரு வாக்காளருக்கு 500 ரூபாயும், பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் நபருக்கு 200 ரூபாய் கமிஷன் என்று அந்த காகிதங்களில் எழுதப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி பூஞ்சோலை ஸ்ரீனிவாசனின் குடோனில் 11 கோடியே 48 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

11 கோடியே 48 லட்சம் ரூபாயில், வெறும் 99 லட்சம் ரூபாய் மட்டுமே 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்ததாகவும், மற்ற அனைத்தும் 200 ரூபாய் நோட்டுகளாக இருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கும் தேர்தல் ஆணையம்,

கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர்களை வைத்து ரிசர்வ் வங்கியின் உதவியுடன் கனரா வங்கியின் கிளையிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்கவும், திமுக பொதுக்கூட்டங்களுக்கான செலவுகளை கவனித்து கொள்ளும் நோக்கில் பூஞ்சோலை ஸ்ரீனிவாசன் பணத்தை மாற்றியதாக அந்த கிளை மேலாளர் தயாநிதி வாக்குமூலம் அளித்தார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த பெண் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.

Exit mobile version