சினிமாவில் கிணற்றைக் காணோம் என்று கூறியது போல, ஏரி மற்றும் ஏரிக்கரையை காணோம் என்று நிஜத்தில் கிராம மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எதற்காக இந்த புகார்? என்ன நடந்தது? ஆரணி அருகே நிகழ்ந்துள்ள சம்பவத்தின் பின்னணி குறித்து பார்ப்போம்…
இப்படி சினிமா நகைச்சுவை காட்சியைப் போன்றே, இல்லாத ஏரி மற்றும் ஏரிக்கரையை காணவில்லை என்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கும்பல்கொள்ளைமேடு கிராம மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கும்பல் கொள்ளைமேடு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1990ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் ஏரி மற்றும் ஏரி கரை உள்ளதாகவும் இதனால் நீர்பிடிப்பு பகுதியில் கட்டியிருக்கும் குடியிருப்புகளை அகற்றப் போவதாகவும் கிராம மக்களுக்கு வருவாய் துறையில் இருந்து தபால் வந்துள்ளது அவர்களுக்கு குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
10 தலைமுறைகளாக இந்த கிராமத்தில் வசித்து வருவதாகவும் இங்கு ஏரியோ, ஏரிக்கரையோ இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசு அதிகாரிகள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட ஏரி மற்றும் ஏரிக்கரை காணாமல் போயிருப்பதால் அதனை கண்டுபிடித்து தருமாறு, கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மக்களை மிரட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையில், ஏரியையே காணவில்லை என்று கிராம மக்கள் அளித்துள்ள புகார் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post