வேலூரில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் அவரது மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமாக வேலூரில் உள்ள வீடு, கல்லூரி மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து தேர்தலில் மக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கட்டுகட்டாக மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அறிக்கை ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறையினர் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யுமாறு வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, காட்பாடி காவல் நிலையத்தில் துரைமுருகன் மகனும், வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, பூஞ்சோலை சீனிவாசன், வட்டச் செயலாளர் தாமோதரன் ஆகியோர்மீதும் 125ஏ, 171ஈ மற்றும் 171பி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் காட்பாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உள்ளது.