தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தராக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது என்றும், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கிறது என்றும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலை, தொடர்ந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியதை தனது அறிக்கையில் மாசுக் கட்டுபாட்டு வாரியம் தெளிவாக குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வாதிட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்ததுடன், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தனர்.