அரபிக்கடலில் உருவான வாயு புயல் எதிரொலியாக, குஜராத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 8ம் தேதி துவங்கியுள்ளது. இந்தநிலையில் அரபிக்கடலில் மாலத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு வாயு என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக 3 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வாயு புயல் தீவிர புயலாக மாறி குஜராத் நோக்கி நகருவதாகவும், போர்பந்தல் – மகுவா இடையே மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாயு புயல் எதிரொலியாக, குஜராத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.