குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் வாயு புயல் நாளை காலை கரையை கடக்கவுள்ள நிலையில், அப்பகுதிகளில் மணிக்கு 140 முதல் 165 வரை காற்று சுழன்றடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மஹுவா இடையில் நாளை காலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவா மேற்கு மற்றும் வடமேற்கில் 450 கிலோ மீட்டர் தூரத்திலும், மும்பையின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் 290 கிலோ மீட்டர் தூரத்திலும், குஜராத் மாநிலம் தெற்கில் 380 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
வாயு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், நாளை கரையை கடக்கும்போது குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் 2 தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.