குஜராத்தில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது

அரபிக்கடலில் உருவான வாயு புயல், அதி தீவிர புயலாக மாறியது. குஜராத் மாநிலம், வெராவல் மற்றும் துவாரகா இடையே இன்று காலையில் இப்புயல் கரையை கடக்க உள்ளதால், கடலோர பகுதிகளில் வசிக்கும் 1.60 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

புயல் கரையை கடக்கும்போது பலத்த மழையுடன் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், புயல் கரையை கடந்த பிறகும் 24 மணி நேரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 52 குழுக்களும், ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் மீட்பு குழுக்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச், மோர்பி, ஜாம்நகர், ஜுனாகத், போர்பந்தர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த 10 மாவட்டங்களுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 ரயில்களின் பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே குஜராத்தில் வாயு புயல் கரையை கடக்கவிருப்பதால், அரசிடமிருந்து அவ்வப்போது வெளியாகும் அறிவுறுத்தல்களின்படி மக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version