மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “நேற்று இரவிலிருந்து அவரது நினைவு மேலோங்கி இருந்துக்கொண்டிருக்கிறது. ஒரு கலைஞனுக்கு இந்தியாவே மொத்தமாக கண்ணீர் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்திலே எஸ்.பி.பி.என்பவர் தோன்றிவிட்டார். இன்றும் புது ஹீரோ ஒருவருக்கு ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பி.பாடினால் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை இன்றும் இருக்கிறது. இப்படியொரு மகா கலைஞன் இருக்கிறார் என்பது ஆச்சரியம். அவரிடமிருந்து நாம் எடுத்துக்கொள்வேண்டியதற்கான ஆயிரம் விஷயங்கள் உண்டு. எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடிய நல்ல மனிதர். தன்னுடைய குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தான் கட்டிய ரெக்கார்டிங் தியேட்டருக்கு, `கோதண்டபானி ரெக்காடிங் தியேட்டர்’ என்று பெயர் வைத்தவர். ஒரு மனிதனுடைய குணம், அன்பு,திறமை, பழக்கவழக்கங்கள் தான் அவரை கொண்டாட வைக்கிறது. இந்தியா முழுக்க அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. காற்றலையோடு காற்றலையாக நம் வாழ்க்கையில் என்றும் கலந்திருக்கிறார். `பாடு நிலா’ பாலுவாக நம்மோடு என்றும் இருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
உங்களுக்கு பிடித்த பாடல்?
நிலா என்று அவர் ஆரம்பித்து பாடிய எல்லா பாடல்களுக்கு எனக்கு பிடிக்கும். `மடைதிறந்து பாடும் நதி அலை நான்’ `நிலா வே வா’ `ஒருவன் ஒருவன் முதலாளி’ என அடுக்கிக்கொண்டே போகலாம். பாடகனாக மட்டுமில்லாமல், ஒரு நடிகனைப்போல, குரலின் வழியே உணர்சிக்களைக் கடத்தியவர். கேளடி கண்மனி படத்தை நான் 10 தடவை பார்த்திருப்பேன் எஸ்.பி.பி.க்காக!” என்றார்.