விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கின்ற வகையில் புதிய சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக அரசு, மத்தியில் பதவியேற்றப் பின்னர், விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும், வங்கிக்கடன், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்றவை காரணமாக விவசாயிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால், விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, 1 ரூபாயில் பயிர்க்காப்பீடு, அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை ஈடுகட்டுகிற வகையில் ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்டவை அரசின்பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக இது குறித்த அறிவிப்பினை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.