சென்னை மக்களுக்கு, தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், சோழிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை வந்த போது, தானும், அமைச்சர் ஜெயக்குமாரும் ஆந்திராவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற்றுவந்ததாக கூறினார்.
மேலும், சென்னை குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 400 எம்எல்டி அளவிற்கு, நெம்மேலி, மீஞ்சூர் பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கோயம்பேடு, கொடுங்கையூரில் சுத்திகரிப்பு நிலையங்கள் என, 870 எம்எல்டி அளவிற்கு தண்ணீர் கிடைக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.