ஃபானி புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளது.
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் உள்ள பூரி, கஜபதி, கஞ்சம், கோர்தா, கோராபுட், கந்தமால் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், நயகர், கட்டக், மயூர்புஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் 13 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவசர மீட்புப் பணிகளுக்காக, கடற்படை, கடலோர காவல் படை, விமானப் படை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மீட்புப் படை, ஒடிசா பேரிடர் தடுப்பு விரைவுப் படை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் வீரர்கள் தாழ்வான பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ உதவிக்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் விடுமுறை, வரும் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து காவலர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் இருக்கும் காவலர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 103 ரயில்களை ரத்து செய்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும், விமான நிலைய நிர்வாகத்தினருக்கும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புயல் குறித்த தகவல் மற்றும் உதவிகளை பெற 1938 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
1999-ஆம் ஆண்டு ஒடிசாவை சூப்பர் புயல் தாக்கியதில் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது. அந்தப் புயலில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.