மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு  ஒன்றிய அளவில் பள்ளி மாணவ மாணவியருக்கான தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதிமுக, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி அண்ணாநகர் தங்கம்மாள் பள்ளியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது. ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு அவர் இலவசமாக கண் கண்ணாடிகளை வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை  முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும்,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரனின் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர்,தங்கத் தேரை வடம்பிடித்து  இழுத்து வழிபட்டனர்.  இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.  

கரூரில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த இந்தப் போட்டியில், பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றன. இறுதியில், முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் அணிக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 72 ஆயிரத்து 72 ரூபாய் ரொக்கப் பரிசினை வழங்கினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கரூரில் குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரிய குதிரை, நடு குதிரை, புது குதிரை என 3  பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில், மாநிலம் முழுவதிலுமிருந்து 90க்கும் அதிகமான குதிரைகள் பங்கேற்றன. போட்டியில், வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரொக்கப் பரிசுகளை, வழங்கினார்.

Exit mobile version