பொங்கல் விழாவை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் தொடர் விடுமுறை மற்றும் காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் கூடுவார்கள். அதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் வசதிக்காக, பூங்கா நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆன்லைன் பதிவு, சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பு, கேளம்பாக்கம், கிரசென்ட் பல்கலைக் கழகம் அருகில் சிறப்பு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்துள்ளது. மேலும், வாகன நிறுத்துமிடத்தில் இருந்து பூங்காவிற்கு வந்து செல்ல இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல், மொபைல் டாய்லெட், குடிநீர் வசதி, ஆம்புலென்ஸ், மருத்துவ உதவி மையங்கள் போன்றவையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொண்டுவரும் சிற்றுண்டிகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்தால், பிளாஸ்டிக் பைகளை அகற்றி, பாதுகாப்பான பைகளுக்கு சிற்றுண்டிகளை மாற்றிக் கொடுத்து அனுப்பவும் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது பொதுமக்களிடம் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.