புதிய உலக சாதனை படைத்தது விராலிமலை ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

உலக சாதனைக்காக புதுக்கோட்டை விராலிமலையில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் பிரமாண்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். விராலிமலையில் பட்டமரத்தான்கோயில் திருவிழாவையொட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த போட்டியில் 1,353 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். இதனையொட்டி, கோயில் திடலில் மிக பிரமாண்ட முறையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் அவிழ்த்து விடப்பட்டதை பார்வையிட்ட கின்னஸ் சாதனை ஆய்வாளர்கள் மார்க், மெலினி ஆகியோர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி உலக சாதனை படைத்திருப்பதாக அறிவித்தனர். மேலும், ஆசிய அளவிலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு 5 மணி நேரத்தில் 647 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டதே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version